அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய உத்தரவு

Must read

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகி இருக்காமையின் காரணமாகவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறபித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய வழங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார்.

ஆளுநராக நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதன் பின்னர் இதுதொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், விசாரணைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் பிரகாரம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிணைமுறியை கொள்வனவு பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மோசடியுடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டனர்.

இருப்பினும், உரிய விசாரணைகள் மற்றும் வழக்கு தாக்கல்கள் இடம்பெறாதமையால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வழங்கியுள்ள உத்தரவின் பிரகாரம் விசாரணைகள் மீள ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article