இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நிதியுதவி அறிவித்தும்.. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். பின்னர் அவரது வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பொலிஸ் மீண்டும் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து சிக்கடப்பள்ளி காவல்நிலையத்தில் அவர் ஆஜரானார். முன்னதாக அவர் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அரசியல் பழிவாங்கலா? முன்னதாக நேற்று (23), அல்லு அர்ஜுன் வீடு தாக்குதல் சம்பவத்தில் கைதாகி ஜாமீன் பெற்றவர்களுள் ஒருவரான ஸ்ரீநிவாச ரெட்டி முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும், அல்லு அர்ஜுனின் ரசிகர்களும் அரசியல் பழிவாங்கலால் அல்லு அர்ஜுன் நெருக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.