இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பாரிய அளவிலான தங்கம் மீட்பு!

Must read

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனை கடத்திச் சென்ற மூவரை கைது செய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையிலிருந்து படகு மூலம் சமீப காலமாக தமிழகத்திற்குள் அதிக அளவு தங்கம் கடத்தி செல்லப்படுகின்றது.

இதையடுத்து இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், இந்திய கடலோர கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளை அடுத்த சிங்கி வலை குச்சு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள முயல் தீவுக்கும், மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த படகைச் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த நபர்கள் கடலில் ஒரு பொதியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து மத்திய வருவாய் துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வேதாளை பகுதியைச் சேர்ந்த ஹாஜா செரீப், ஹம்துன் திஸ்தர்,ஹெரோஸ் அலி என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரையும் படகுடன் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாங்கள் இலங்கையில் இருந்து படகில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும் அதிகாரிகளை கண்டதும் கடலில் வீசியதாகவும், கடலில் பொதியை வீசிய இடத்தை ஜி.பி.எஸ் கருவியை கொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வியாழன் மாலை வரை தங்கத்தை கடலுக்கு அடியில் தேடி கிடைக்காததால் நேற்று வெள்ளி காலை முதல் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் தங்கம் அடங்கிய பொதியை தேடி வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (5) மாலை 3.00 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்கம் அடங்கிய பொதி கிடைத்ததையடுத்து தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமுக்கு எடுத்து சென்று எடை போட்டு பார்த்ததில் அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என மத்திய வருவாய் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கம் யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article