உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்

Must read

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது.

இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த சூழலில், உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 ‘ட்ரோன்’கள் வீசப்பட்டதல், உக்ரைன் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான வொலைன், மைகொலைவ், ஜபோரிச்சியா, துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன.

அங்குள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களால், மூன்று பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டது.

இது குறித்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெத் வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா இந்த தாக்குதலில் பயன்படுத்தியுள்ளது.

இதில், 100க்கும் மேற்பட்டவை வானிலேயே அழிக்கப்பட்டன. மைகொலைவ் நகரில் இருவரும், ஒடேசா பகுதியில் இருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்,” என்றார்.

ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர், ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியதை அடுத்து, இரு தரப்பிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article