துவாரகையில் ருக்மணி தேவி க்ருஷ்ணனுடன் இருந்து வரும் போது ஒரு நாள் அவளுக்கு க்ருஷ்ணனின் சிறு வயதில் அவர் எவ்வாறு இருந்தார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றியது.உடனே விஸ்வகர்மா வை அழைத்து எனக்கு பால – க்ருஷ்ணன் எப்படி இருந்தான் என்று அறிய ஆவல் உள்ளது என்று கூறினார்.
உடனே விஸ்வகர்மா சின்னக் கண்ணன் குட்டி க்ருஷ்ண விக்ரகம் செய்து அதில் ஒரு கையில் மத்தும் (தயிர் கடையும் மத்து) மற்றொரு கையில் வெண்ணெய் யும் (வலது கையில் மத்தும் இடது கையில் வெண்ணெய் யும்) வைத்திருப்பது போல அழகிய பால க்ருஷ்ண விக்ரகம் செய்து குடுத்தார். ருக்மணி மிகவும் மகிழ்ந்து தினமும் அதை பூஜித்து வந்தாள்.
அதற்கு பிறகு அந்த விக்ரகத்தை அர்ஜுனன் பூஜித்து வந்தான். அவனுக்கு பிறகு யாரும் பூஜிக்க வில்லை என்பதால் அந்த விக்ரகத்தை ஒரு கோபி சந்தனத்தில் வைத்து பத்திரப் படுத்தி வைத்தனர். ஆனால் துவாரகை கடலில் மூழ்கியதால் இந்த விக்ரகமும் மூழ்கியது.
இது இவ்வாறு இருக்க காற்றும் மழையும் கடல் அரிப்பும் கொந்தளிப்பும் அடிக்கடி உண்டானதால் அந்த விக்ரகம் கோபி சந்தனத்தில் செய்யப்பட்டு இருப்பதாலும் அது கடலுக்கு மேலேயே மிதந்தது. ஒரு நாள் வணிகர்கள் கப்பல் ஒன்று வரும் போது ஒருவர் அந்த கோபி சந்தனத்தை எடுத்து கப்பலில் உள்ள தங்கம்/வைரம்/வைடூரியம் முதலியவைகளுடன் சேர்த்து வைத்தார்.
அந்த கப்பல் புறப்பட்டு தெற்கு நோக்கி வரும் போது பயங்கர காற்று மழை புயல் சூறாவளி வீசிக்கொண்டு இருந்தது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கும் போது தூரத்தில் ஒரு சந்நியாசி அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவரை இங்கு இருந்தே நமஸ்கரித்தனர். உடனே அவர் கையை அசைத்து சில மந்திரங்களை ஓதி காற்றையும் மழையையும் புயலையும் சூறாவளி யை யும் நிறுத்தினார். அவர் வேறு யாரும் அல்ல அவர் தான் மத்வ மதத்தை ஸ்தாபித்த மத்வாச்சாரியார் ஆவார். அவரின் இயற்பெயர் வாசுதேவன் (அடியேனின் பெயர்).
கப்பலில் உள்ளவர்கள் குருவின் சைகையால் மழை நின்றதைப் பார்த்து மகிழ்ந்து கரை அருகில் வந்து நமஸ்கரித்து அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொன் குவியலைக் காட்டி தங்களுக்கு எவ்வளவு பொன் வைரம் வைடூரியம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவர் எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்த கோபி சந்தனம் மட்டும் போதும் என்று கூறி அதை மட்டும் எடுத்துக் கொண்டார்.
பின் அதை நன்கு சுத்தம் செய்து அதனுள் இருந்த க்ருஷ்ண விக்ரகத்தை மட்டும் எடுத்து ஸ்தாபித்தார்
பெயர்க் காரணம்…
உடு என்றால் நட்சத்திரம் பா என்றால் தலைவர் உடுபா என்றால் நட்சத்திரங்களின் தலைவன் அதுவே நாளடைவில் மருவி உடுப்பி ஆயிற்று.
அதாவது சந்திரனுக்கு 27 மனைவியர் அதில் முதல் மனைவி பெயர் ரோஹிணி அவள் மேல் மட்டும் சந்திரனுக்கு அலாதி பிரியம். அது மற்றவர்களுக்கு பொறாமையாக இருந்தது. உடனே அது பற்றி தன் தந்தையான தஷ்சப் பிரஜாபதி யிடம் புகார் செய்தனர். அதைக் கேட்ட தஷ்சப் பிரஜாபதி அவனுக்கு இன்று முதல் நீ தேய்ந்து போவாய் என்று சாபம் கெடுத்தார் . அந்த சாபத்தை நீக்குவதற்காக அவன் உடுப்பி வந்து க்ருஷ்ணரை வழிபட விமோசனம் கிடைத்தது.நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன் வழிபட்டதாலும் அவருக்கு உடு பா (நட்சத்திரங்களின் தலைவன்) என்று பெயர் வந்தது
உடுபா நாளடைவில் மருவி உடுப்பி ஆயிற்று. இதுவே உடுப்பி க்ருஷ்ணன் தோன்றிய வரலாறு.
உடுப்பி கிருஷ்ணர் – துவார தரிசனம் ஏன் ?
கிருஷ்ண பக்தரான கனகதாசர், உடுப்பி கிருஷ்ணன் கோயில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால், சேவகர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே செல்ல முயன்ற கனகதாசரிடம், அவரது குலம் பற்றி விசாரித்தனர். அவர், “இடையர் குலம்’ என்று சொன்னதும், கழுத்தைப் பிடித்துத் வெளியே தள்ளினர்.
“”காவலர்களே! எல்லா மனிதர்களும் பிறப்பால் ஒன்றுதான். குலத்தால் பிரிப்பது நியாயமல்ல,” என்று கனகதாசர் சொல்லியும் மறுத்தனர். இருந்தாலும் தாசர் நம்பிக்கை இழக்கவில்லை. உடுப்பி கிருஷ்ணனைத் தரிசித்துவிட்டுத்தான் ஊர் திரும்ப வேண்டும் என்று உறுதி பூண்டார்.
“”கிருஷ்ணா… உன் தரிசனம் எனக்கு மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? சதா சர்வ காலமும் உன் சிந்தனையிலேயே மூழ்கித் திளைக்கும் இந்த பக்தன் மீது இரக்கம் காட்டு,” என கோயிலுக்கு பின்பக்கமாக வந்து கதறி அழுதார்.
அதுவரை, கிழக்கு நோக்கி நின்று அருள்பாலித்த கிருஷ்ணர் சிலை, பின்பக்கமான மேற்கு நோக்கி திரும்பியது. அத்துடன், தனது உண்மையான பக்தன் தரிசிக்கும் வகையில், சிலையின் கையிலிருந்த மத்து சுவரில் துவாரத்தை உண்டாக்கியது.
துவாரத்தின் வழியாக கிருஷ்ணனின் திவ்ய தரிசனம் கனகதாசருக்கு கிடைத்தது. அன்றிலிருந்து உடுப்பி கிருஷ்ணர், மேற்கு நோக்கியே நிரந்தரமாக நின்று விட்டார். கனகதாசர் கண்டு தரிசித்த அந்த துவாரம் “கனகன கிண்டி’ எனப்படுகிறது.