சீதாதேவியின் சாபம்!

Must read

தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது. சீதாதேவி, தசரத மகாராஜாவுக்கு சிரார்த்தம் செய்து வைத்தாள். ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும், 14 ஆண்டுகள் வனவாச காலத்தில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டே இருந்தனர். அப்போது ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.

இந்த காலகட்டத்தில் ராமரும், லட்சுமணனும் கயா பகுதியில் இருந்தனர். தந்தைக்கு சிரார்த்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்காக, ராமரும், லட்சுமணரும் வனத்தின் அடர்ந்த பகுதிக்குச் சென்றனர். அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது.

அந்த காலத்தில் யாருக்காக சிரார்த்தம் செய்கிறோமோ, அவர்கள் நேரடியாக வந்து உணவை சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். ராமரும், லட்சுமணரும் வர தாமதமான சமயத்தில், தசரத மகாராஜா வந்துவிட்டார்.

அவர் சீதாதேவியிடம், “எனக்கு மிகவும் பசிக்கிறது” என்று கூற, சீதாதேவியும் உணவை தயார் செய்து தசரதருக்கு அளித்தார். அதற்கு கயாவில் உள்ள ஒரு வேதியரும் மந்திரம் சொல்லி நடத்திக் கொடுத்தார். இதையடுத்து தசரத மகாராஜா மகிழ்ச்சியுடன் பித்ருலோகம் திரும்பிச் சென்றார்.

அதன்பிறகுதான் ராமரும், லட்சுமணரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சீதாதேவி, தசரத மகாராஜா வந்ததைப் பற்றியும், அவருக்கு சிரார்த்தம் சொல்லி உணவிட்டதையும் கூறினார்.

ராமர், “இதை எப்படி நம்புவது?” என்று கேட்க, அதற்கு சீதாதேவி, சிரார்த்தம் செய்து வைத்த வேதியரை சாட்சியாக அழைத்தாள். அந்த வேதியரோ, ‘பெண் சிரார்த்தம் செய்து முடித்துவிட்டாள் என்று சொன்னால் தவறாகிவிடும்’ என்று தயங்கி, “நான் சிரார்த்தம் செய்யவில்லை” என்று கூறிவிட்டார்.

உடனே சீதாதேவி, பல்குனி நதியை சாட்சியாக அழைத்தாள். பல்குனி நதியோ, “வேதியர் சொல்வது சரிதான். நான் இந்த பெண் சிரார்த்தம் கொடுத்ததைப் பார்க்கவில்லை” என்று கூறிவிட்டது.

சீதாதேவி இப்போது அக்னியை சாட்சியாக அழைத்தாள். அக்னி, ‘நானும் பார்க்கவில்லை’ என்று கூறியது. அடுத்ததாக பசுவை சாட்சிக்கு அழைத்தாள், சீதாதேவி. பசுவோ, ‘அக்னி பகவானே ‘நான் பார்க்கவில்லை’ என்று நழுவி விட்டார்.

நான் பார்த்ததாக சொன்னால், அது சரியாக இருக்காது’ என்று கருதி, அதுவும் “நான் பார்க்கவில்லை” என்று சொன்னது.

அப்பொழுது அங்கிருந்த அட்சய வடத்தை (ஆலமரம்) சீதாதேவி சாட்சியாக அழைக்க, அட்சய வடம் “சீதாதேவி, தசரத மகாராஜாவிற்கு உணவிட்டது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்..” எனக் கூறியது.

இதனால் ராமரும், லட்சுமணரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சீதாதேவி, வேதியரை நோக்கி “நீங்கள் சிரார்த்தம் செய்துவைத்து விட்டு, நான் செய்யவில்லை என்று கூறியதை ஏற்க முடியாது. எனவே நீ எப்போதும் பசியுடனேயே இருப்பாய்” என்று சபித்தாள்.

அதேபோல் பல்குனி நதியை நோக்கி, “நீ இன்றில் இருந்து வறண்டு போவாய்” என்றும், அக்னியிடம், “நீ இன்று முதல் நல்லவற்றை மட்டுமின்றி, அசுத்தங்களையும் எரிப்பாய்” என்றும், பசுவை நோக்கி “இன்றுமுதல் உன்னை யாரும் பூஜிக்க மாட்டார்கள்” என்றும் சாபமிட்டாள்.

ஆனால் அட்சய வடத்தைப் பார்த்து, “இனி உன் நிழலில் யார் ஒருவர் முன்னோருக்காக சிரார்த்த பிண்டம் வைக்கிறார்களோ, அவர்களின் 10 தலைமுறையினரும் மோட்சம் செல்வார்கள்” என்று வரம் அருளினாள்.

வேதியர், அக்னி, பல்குனி நதி, பசு ஆகிய நால் வரும், சீதாதேவியிடம் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ராமரும் அவர்களுக்கு அருள்செய்யும்படி சீதாதேவியிடம் கூறினார். எனவே சீதாதேவி “யாரும் வருந்தவேண்டாம். வேதியரே.. கயா தலத்தில் கயாவாலி வேதியர்களுக்கு யார் அன்னம் கொடுக்கிறார்களோ, அவர்களின் வம்சத்தில் பஞ்சம் என்பதே இருக்காது.

அக்னியே.. அனைத்து தேவ காரியங்களிலும் நீ இன்றி எதுவும் நடக்காது. பல்குனி நதியே.. நீ வறண்டு போனாலும், உன்னை நினைத்து யார் சங்கல்பம் செய்கிறார்களோ, அவர்களுக்கு கங்கையில் குளித்த பலன் கிடைக்கும்.

பசுவே, உன் முன்பாக நின்று யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள். ஆனால் உன் பின்புறத்தை பூஜிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்” என்று வரம் அருளினாள்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article