தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

Must read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பல கருத்து ரீதியான வேறுபாடுகளைக் கடந்து எல்லோரது விருப்பங்களுடன் மன்னார், வவுனியா ஆகிய இடங்களின் இடைவெளியைக் கருத்தில்கொண்டும் இம் மாவட்டங்களில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்களைக் கவனத்தில் கொண்டும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்குத் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்லோரையும் அரவணைத்து 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அதைப் போல் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம். எமது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூட மக்களிடம் நான் இதனைத் தெரியப்படுத்தியிருந்தேன். ஆகவே, நாங்கள் ஒன்றாகப் பலமாக இணைந்து பயணிக்க வேண்டி தேவையை உணர்ந்திருக்கின்றோம்.

தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் நான். நீதிமன்ற வழக்கில் இருப்பதால் அது நீக்கப்பட்ட பின் செயற்படுவேன். இதற்கான காலம் கனிந்து கொண்டிருப்பதாக நான் உணர்கின்றேன். இப்போது நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் என்னை உயர்மட்டக் குழுவில் நியமித்துள்ளார்கள்.

8 இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கான கட்சியின் குழுவின் தலைவராக நானும், பிரதம கொறடாவாக ப.சத்தியலிங்கமும், தீர்மானக் குழுவில் நானும் சாணக்கியனும் செயற்படப் போகின்றோம்.

எமது கட்சியின் பேச்சாளரை 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதலாவது அமர்வு நிறைவடைந்த பின் தீர்மானிப்பதாக முடிவெடுத்துள்ளோம்.

8 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவரே தெரிவு செய்யப்படுவார். அத்துடன் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாகப் பயணிப்பதுடன் ஏனையவர்களையும் அரவணைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளோம்.” – என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article