தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு கவிதை
வரப்புயரக் கோன் உயரும் அன்று
கோனின் மானியத்திற்கு ஏங்கும்
வரப்புகள் இன்று.
செயற்கை நுண்ணறிவு AI
இன்றைய தொழில் நுட்பம்
எதுவாகினும்,
இயற்கை எய்தும் வரை
பூநகரி மொட்டைக்கறுப்பன் முதல்
தஞ்சாவூர் பொன்னி வரை
வயலிலிலுருந்துதான் வரவேண்டும்.
விதைகளின் மௌனம்
விவசாயியால் கலையும்போது
தையில் அறுவடை,
நம் மௌன அஞ்சலி
தள்ளி வைக்கப்படுகிறது
கொள்ளி போடுவதிலிருந்து.
ஆதியில் மனிதன்
அந்தப் பாதியையும் மறைக்காமல்
மலைகளில் மரங்களில் தொங்கி,
தொங்கிய கனிகளைப்
பறித்துப் பசி தீர்த்த நம்மை,
ஆத்தோரம் அழைத்து வந்து
பாத்தி கட்டி பயிர் செய்து
தன்னுணவைத் தானே படைத்து
உணர்வுகளால் உறவுகள்கூடி
கூட்டு வாழ்க்கை கண்டு
சமைத்ததை பகிர்ந்துண்ட
முதல் நாகரீக மனிதம்
நம் மரபுத் தமிழினம்.
மலைகளிலே முலை தெரிய
இலை உடுத்திய மனிதனை
நஞ்சையில் பருத்திப் பயிர் செய்தே
பஞ்சு நூலால் நெஞ்சு தைத்து
நெஞ்சையும் குஞ்சையும் மறைக்கும்
விஞ்சை கண்டவன்.
ஒரு வாய் உணவுக்குள்ளே கலந்திருப்பது
வெறும் சோறும் கறியுமல்ல
அப்படியே மென்று தின்பதற்கு.
எண்ணற்ற மனிதர்களின் வியர்வை
கூலித் தொழிலாளரின் கண்ணீர்
மாடுகளின் மலமும் சலமும் உரமாக
மண்ணில் உள்ள எண்ணில்லா
மண் புழுக்களின்,
கண்ணில்லா நுண்ணுயிரிகளின்
தன்னிகரில்லா தியாகம்.
தேனீக்களும் வண்டுகளும் மந்திரத்தை ஓத
மகரந்த மாற்றுத் திருமணத்தால்
பிறந்தவைதான் மணிகளும்
கனிகளும் காய்களும்.
இத்தனைக்குப் பின்னும்
நம்மில் எத்தனை பேர்
தட்டில் கொட்டிய உணவினை வீணா
கழிவுத்தொட்டியில் போட
யார் தந்த உரிமையிது.
காசும் கடனட்டையும் தந்த திமிரோ,
இரண்டும் இல்லாது
மேலுள்ளவை உயிர்வாழும் ஆனால்….
மேற்கத்திய மனிதம் -அன்று
மரங்களில் இருந்து
கீழிறங்காத காலம்.
பச்சை மாமிசம் தின்ன
காட்டுமிராண்டிகளாய்
வேட்டையாடிய காலமது.
பூமி தட்டையானதென
மூடமாய் நம்பி கலிலியோவை
கழுமரம் ஏற்றிய முட்டாள் பட்டாளம்
மேற்குலகில் வாழ்ந்த காலமது.
பூமி சூரியனைச் சுற்றி
தானும் சுற்றும்
வானியல் விஞ்ஞானத்தை – அன்று
கல்லுகளில் வரைந்தும்
விழாக்களாய் கொண்டாடிய
முன் தோன்றிய
மூத்த மரபினம் நம்மினம்.
கவிதை ஆக்கம் : போல் ஜோசேப்