“குடும்ப ஆட்சியில் தந்தை, மகன், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட முறையின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்” என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே முன்னாள் முதல்வர், ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி அவர் உறுதி மொழிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த உறுதிமொழியில், “தீயசக்தியை விரட்டியடிக்க, குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட கழகத்தை நிறுவிய நம் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அயராது உழைப்போம்.
கழகம் காக்க, கர்ஜிக்கும் சிங்கமெனத் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பிட, விண்ணை முட்டும் வீரர்களின், ஆர்ப்பரிப்பைப் பாரீர்.
பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதல்வர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.