முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குபவர்களை தடுக்க குவிக்கப்படும் காவல்துறையினர்

Must read

அம்பாறை(Ampara) மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (14) காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் காணாமல் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

காவல்துறையினர் குவிப்பு
எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான காவல்துறையினர் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர்.

அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் காவல்துறையிரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article