வடக்கின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் வழங்கிய சீனா

Must read

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை கையளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக் காசோலையைக் கையளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நாகலிங்கம் வேதநாயகனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர், இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பு இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

வட பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானிக்கையில் சந்தோசமாக இருப்பதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான சீனத் தூதுவரை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் ஊழல் ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

வட பகுதி விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையாக அவர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குரிய வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் மற்றொரு முக்கிய வளமான மீன்பிடி மூலமாக பிடிக்கப்படும் மீன்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனவும், அவை உற்பத்திப் பொருள்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்துக்கு சீன அரசு தொடர்ச்சியாக உதவிகளைச் செய்யும் என்பதைக் குறிப்பிட்ட சீனத் தூதுவர், வடக்கு மாகாண மக்கள் மிகவும் அன்பாக வரவேற்பு உபசரிப்பது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் 800 மில்லியன் மக்களின் வறுமையைக் கடந்த தசாப்த காலத்தில் இல்லாதொழித்ததாகவும், அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகதத்துடன் ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலனும் பங்கேற்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article