வெள்ளக்காடான மட்டக்களப்பு: ஒருவர் மாயம் – 522 பேர் இடப்பெயர்வு!

Must read

சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளகாடாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டிப்பளை, காத்தான்குடி, கோரளைப்பற்று கிரான், மண்முனைவடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறி இவ்வாறு உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேவேளை வெள்ளத்தினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து மற்று வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலானதும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான அதாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீரி பாய்து ஓடும் நிலையில் அதனை கடந்து செல்ல முற்பட்ட ஆண் ஒருவரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்.

மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை ஆகக்கூடிய மழைவீழ்சியாக வாகனேரியில் 139.0 மில்லிலீற்றரும் மட்டக்களப்பில் 103.4 மில்லி லீற்றருமாகவும் நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணிவரை மட்டக்களப்பில் 34 மில்லிலீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்டதிலுள்ள உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவு 10 உயரத்திலும் நவகிரிகுளம் றூகம்குளம், வாகனேரிகுளம், கட்டுமுறிவுகுளம், கித்துள்குளம், வெலியாகண்டிகுளம், வடமுனைகுளம், புனானைகுளம், ஆகிய குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அந்த அந்த குளங்களின் நீர் மட்டத்துக்கு ஏற்றவாறு அளவில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான காற்றினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சம்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகில் இருந்த மரம் ஒன்று கட்டித்தின் மீது முறிந்து வீழ்ந்ததால் கட்டிடம் பாதிக்கப்பட்டதுடன் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்தோடு, மாவட்டத்தில் வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்களை மாநகரசபையின் தீயணைப்பு படையிளர் வெட்டி அகற்றிவருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்துவருவதான் மக்களின் இயழ்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதுடன் உயர்தர மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் இன்னும் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளார்கள் என மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றை அண்டி வாழும் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article