இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கட்கிழமை (23) 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இரவு 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இவர்களை கைது செய்துள்ளனர்.
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்து 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான 8 பேர் உள்ளடங்குவதோடு, மீனவர்களின் உறவினர்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.