இலங்கையில் மாகாண சபையை அகற்றியே தீருவோம் என்று ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “மாகாணசபை என்பது வேறு. சம உரிமை என்பது வேறு என்பதை ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மாகாண சபை என்பதை நாம் ஏற்கமாட்டோம். ஆனால், இன்றைய மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்கப் பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாகக் கூறியுள்ளார்.
பல தமிழ்த் தலைவர்களிடமும் அவர் இந்தக் கருத்தைக் கூறி இருப்பதையும் தான் அறிவதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
இப்போது “மாகாண சபையை அகற்றி விட்டு அதற்குப் பதில் நாடு தழுவிய, சம உரிமையைத் தருவோம்” என தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறுவது வேடிக்கையானது என்றும், சம உரிமை கிடைப்பது நல்லது. ஆனால், சம உரிமை என்பது வேறு. அதிகாரப் பகிர்வு என்பது வேறு. என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மாகாண சபையை அகற்றுவது பற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.