மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘‘தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறார்.
சட்டவாக்கம் தொடர்பில் தெளிவில்லாமலேயே ஜனாதிபதி இவ்வாறான கருத்தை முன்வைத்தி ருக்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.
தற்போதுவரையில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்செய்வதற்காக பாராளுமன்றத்தில் சட்டமொன்றை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால், சரியான சட்டமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் அனுமதிபெற்று வர்த்தமானியில் வெளியிட்டு இருவாரங்களாகும்வரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாது.
அதனால், பெப்ரவரி 05ஆம் திகதியே இந்தச் சட்டமூலத்துக்கு அனுமதி பெற்று முழுமை செய்ய முடியும் என்றும், அதனை முறையாக ஒழுங்குபடுத்தி சபாநாயகரிடம் கையொப்பம் பெற இரு நாட்களாவது ஆகும். அதன் பின்னரே அது சட்டமாக அமுலாக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலேயே தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படையலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், பரீட்சைக் காலத்தில் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தலை அறிவித்தால் மே மாதத்தின் இடைப் பகுதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும்.
எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.