அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. புளிப்புச் சுவையை மிகச்சரியான அளவில் நமக்குக் கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற புளி.
நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளியில் ஏராளமான மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் விதைகள், பட்டைகள் என அனைத்துமே அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை.
புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவாக கட்டுக்குள் வரும்.
மேலும் புளி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அத்தோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை புளிக்கு உண்டு.
உடல் உஷ்ணமாகி வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்றாகக் கரைத்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையைக் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியடையும்.
கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீங்கினால் புளியை நன்றாகக் கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, அடிபட்ட இடத்தில் தேய்க்க வேண்டும்.
எனவே சிறந்த மருத்துவத்தைத் தரும் புளியைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.