இராணுவத்திடமிருந்து மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்

Must read

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் இன்று புதன்கிழமை காலை (25.12.2024) வயாவியானில் நடைபெற்றது.

அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர். நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது. கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.

பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது. அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம்.

அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும். அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம் என்றார்.

இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப் போன்று மீள்குடியமர்ந்தார்கள்.

2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி.

இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம்.

இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன்.

வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் வடக்கு ஆளுநரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், வலி. வடக்கு பிரதேச சபை செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும்கரங்கள் மற்றும் பூனையன்காடு இ;ந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article