என் மனை.. என் வீடு.. எனக்கு எதற்கு வாஸ்து?
நாம் ஒரு மனை வாங்கும்போதும் அல்லது கட்டிடம் கட்டும்போதும் ஒரு சிறிய தொகையை செலவு செய்து அந்த இடம் வாஸ்துபடி உள்ளதா? என்று பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
ஏனென்றால் வாஸ்து பார்க்க செலவாகுமே, அதை மிச்சப்படுத்தலாம் என மிச்சப்படுத்தினால் அதனால் ஏற்படும் பாதிப்பையும், கஷ்டங்களையும் நாமும் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து விட்டு, நம்முடைய தலைமுறைகளான வாரிசுகளுக்கும் அதை விட்டு செல்கிறோம்.
இந்த பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்சபூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது? அந்த அமைப்பானது அந்த இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா? என்பதையெல்லாம் கணித்து இயற்கையை ஒத்து செல்வது தான் உண்மையான வாஸ்து.
காலமெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிய ஓர் இடம் சரியாக அமைய வேண்டுமே என்ற மக்களின் கவலையும் நியாயமானதுதான்.
ஆனால், தேவையற்ற செலவுகளை வைக்கும் விஷயமாக வாஸ்து சாஸ்திரம் இருக்கக்கூடாது என்பதும் பலரின் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே, அவர்களுக்கு தெளிவு ஏற்படுத்த நினைத்து, எப்படிப்பட்ட நிலத்தை வாங்கலாம்? அங்கு எப்படி வீடு கட்டலாம்? என்பது போன்ற அடிப்படை வாஸ்து விஷயங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வகையில் நீங்கள் வாங்கும் நிலம் செவ்வகமாக இருப்பது நல்லது. ஒருவேளை அது செவ்வகமாக இல்லையென்றால், அதற்கு உரிய வாஸ்து விஷயங்களை கவனத்தில் கொண்டு வீடு கட்டலாம். மேலும் நீங்கள் வாங்கும் நிலத்தில் வடகிழக்கு மூலையைவிட, தென்மேற்கு மூலை சற்று உயர்ந்து இருக்க வேண்டும். அதுவே நல்ல இடமாகும். அந்த நிலத்தில்தான் நல்ல வளர்ச்சியும், நல்ல நீரோட்டமும் இருக்கும் என்பது உண்மை.
மேலும் இதுபோன்ற சில இயற்கை சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது மட்டுமே உண்மையான வாஸ்து என கொள்ளலாம்.