சிவசிவ அருணாசலம்! ஆற்றல் தரும் அக்னிலிங்கம் திரு அண்ணாமலை!!

Must read

திருவண்ணாமலை கோவிலில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை பார்க்கலாம். இந்த ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன. இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது.

அந்த வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது மிக கடினமானது. முக்கிய லிங்கங்கள் பற்றி மட்டும் இப்போதும் செவி வழி செய்தியாக தகவல்கள் உள்ளன. இந்த லிங்கங்கள் ஆலயத்தின் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பதை தெரிந்து கொண்டால் வழிபாடு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். ராஜகோபுரத்தை கடந்ததும் வரும் 5-ம் பிரகாரத்தில் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற 2 லிங்கங்கள் இருப்பதை பார்க்கலாம். அடுத்து 4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் எதிரே பிரம்ம லிங்கம், ஸ்ரீநளேஸ்வரர், வித்யாதேஸ்வரர் ஆகிய 3 லிங்கங்கள் உள்ளன.

3-ம் பிரகாரத்தில் மகிழ மரத்தடியில் ஜலகண்டேஸ்வரர், கல்யாண மண்டபத்தில் பீமேஸ்வரர், அருணகிரி யோகீஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கங்கள் பஞ்ச பூதங்களை பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் திருவண்ணாமலை தலத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருப்பதை நமது முன்னோர்கள் உணர்த்தி உள்ளனர்.

2-ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து லிங்கங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இந்திர லிங்கம், சனகேஸ்வரர், சனந்தனேசுவரர், சனாதனேஸ்வரர், சனதீகுமாரேஸ்வரர், கவுசிகேசுவரர், குத்ஸரிஷி ஈஸ்வரர், வால்மீகிசுவரர், அக்னி லிங்கம், விக்னேசுவரர், விஸ்வநாத ஈஸ்வரர், ஸ்ரீநாரதேசுவரர், ஸ்ரீகாசி லிங்கம், ஸ்ரீகாசி லிங்கம், வைசம் பாயனேசுவரர், ஸ்ரீவாமரீஷிசுவரர், எம லிங்கம், காசி லிங்கம், காசிலிங்கம், காசி லிங்கம், காசி லிங்கம், ஸ்ரீதும்புரேஸ்வரர், ஸ்ரீநிருதலிங்கம், ஸ்ரீ வருணலிங்கம், வியாசலிங்கம், ஸ்ரீவிக்ர பாண்டீ சுவரர், ஸ்ரீவணிஷ் டலிங்கம், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீவாயுலிங்கம், ஸ்ரீகுபேர லிங்கம், விசுவாமித்ஸ்வரர், ஸ்ரீபதஞ்சலீசுவரர், ஸ்ரீவியாக்கிரபாதேசுவரர், 108 லிங்கம், ஸ்ரீஅகஸ்தீசுவரர், ஸ்ரீஜீரஹரேசுவரர், ஈசானலிங்கம் என 37 லிங்கங்கள் இந்த பிரகாரத்தில் உள்ளன.

இந்த 37 லிங்கங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டவை. எனவே இந்த லிங்கங்களை மிக பொறுமையாக வழிபாடு செய்தால் பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மிக உன்னிப்பாக கவனித்தால் கிரிவலப்பாதையில் நாம் வழிபடும் அஷ்டலிங்கங்களும் இங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரே கல்லில் 1008 லிங்கம் இருப்பதை பார்க்கலாம். இந்த லிங்கங்களில் பெரும்பாலானவை ரிஷிகளால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து கருவறையில் இருக்கும் மூலவரான அண்ணா மலையார் லிங்கத்தை பார்க்கலாம். 5-ம் பிரகாரத்தில் இருந்து ஒவ்வொரு லிங்கமாக நாம் கணக்கிட்டு வந்தால் மிகச்சரியாக 50-வது லிங்கமாக கருவறை லிங்கம் திகழ்கிறது. இந்த லிங்கத்திற்கு அக்னி லிங்கம் என்று பெயர். சிவப்பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வடிவமாக திகழ்கிறார். அதை உணர்த்தவே காஞ்சீபுரத்தில் மண்லிங்கம், திருவானைகாவலில் நீர் லிங்கம், ஸ்ரீகாளகஸ்தீயில் வாயு லிங்கம், சிதம்பரத்தில் ஆகாய லிங்கம் இருக்கின்றன. அதேபோன்று திருவண்ணாமலையில் அக்னி லிங்கம் திகழ்கிறது.

முன் ஒரு காலத்தில் சிவபெருமானை நோக்கி பார்வதி தேவி கடும் தவம் இருந்தாள். அவளுக்கு காட்சி கொடுப்பதற்காக சிவபெருமான் அக்னி வடிவம் எடுத்து வந்தார். பார்வதியும் பரமசிவனும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆக மாறி அக்னி மண்டலத்தின் நடுவில் நடனம் புரிந்தனர். பிறகு சிவலிங்கமாக மாறினார்கள். அந்த லிங்கம்தான் அக்னி லிங்கமாக போற்றப்படுகிறது.

அக்னி லிங்கம் மிகுந்த ஆற்றல் உடையது. நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் தரும் சிறப்புடையது. திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும். அக்னி லிங்கத்தை வழிபடும்போது நமது மனம் இலவம்பஞ்சு போல லேசாகி விடும். நம் மன பாரத்தை எல்லாம் அக்னி லிங்கமாக இருக்கும் அண்ணாமலையார் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தோன்றும். சுருக்கமாக சொல்வது என்றால் நம் மனது நிர்விகல்பம் ஆகி விடும். அக்னி லிங்கத்திடம் நம் மனதை ஆத்மார்த்தமாக செலுத்தினால் மட்டுமே இந்த நிலையை நாம் பெற முடியும்.

இத்தகைய சிறப்புடைய அக்னி லிங்கத்தை வழிபட்ட பிறகு வெளியில் வந்து முதல் பிரகாரத்தை சுற்றி வரலாம். அங்கு லிங்கோத்பவர் உள்ளார். அடுத்து உண்ணாமலையம்மன் சன்னதியிலும் லிங் கங்கள் உள்ளன. அங்குள்ள அஷ்ட லட்சுமி மண்டபத்தில் சோழலிங்கம், சேரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் நிறுவி வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த லிங்கங்கள் தவிர அடிமுடி அறியாதவர், லிங்கம், ஸ்ரீசோமேசுவரர் உள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article